நீர் கட்டண திருத்த குற்றச்சாட்டுகளுக்கு ஜீவன் பதில்!

அண்மைய நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எழுந்துள்ள விசனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்துள்ளதோடு, இந்த நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.

சராசரியாக நீர் வாடிக்கையாளர்கள் ஒரு மாததிற்கு 13.5 யூனிட்களை (13,500 லிட்டர்கள்) பயன்படுத்துவதாகவும், இதன் மூலம் மாதாந்த கட்டணமாக திருத்தப்பட்ட கட்டணத்தின் கீழ் ரூ. 1300 அரவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் தோட்டங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டணதில் எதுவும் நிறுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம், மூலப்பொருட்கள், பணமதிப்பிழப்பு, அதிக வட்டி விகிதங்கள் உள்ளிட்ட விலைவாசி உயர்வு காரணமாக, ஒரு யூனிட் (1000 லிட்டர்) தண்ணீர் வழங்குவதற்கான செலவு 130 ரூபவாகிறது, இந்நிலையில் மக்களுக்கு முதலிய கட்டணத்திற்கு நீர் வழங்குவது சாத்தியமான ஒரு விடயம் அல்ல என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டண உயர்வின் கீழ், மாதாந்தம் 20 யூனிட்டுகளுக்கு மேல் (20,000 லீற்றர்) நீரைப் பயன்படுத்தும் நுகர்வோர் மட்டுமே நியம அலகுச் செலவையும் அதற்கும் அதிகமான தொகையையும் செலுத்த நேரிடும் என்பதுடன், 70% மக்கள் இந்த வரம்புக்குக் கீழே உள்ள பாவனையாளர்கள் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்கால நடவடிக்கை குறித்து விளக்கமளித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர்க் கட்டணக் கட்டமைப்பில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தும் வகையில் புதிய கட்டண வழிகாட்டல் மற்றும் சூத்திரம் ஒன்றை அமைச்சு இந்த வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

தூய்மையான, குடிநீரை சீராக வழங்குவதை உறுதி செய்வதற்காக, புதிய நீர் பாதுகாப்பு திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம் மற்றும் காலநிலையை திட்டமிடல் ஆகியவற்றை அமைச்சு உருவாக்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் “உங்களில் சிலர் எதிர்கொள்ளும் சவால்களை நான் புரிந்துகொள்கிறேன், மேலும் நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் நமது நாட்டின் எதிர்காலத்திற்கான நிலையான நீர் விநியோகத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த கட்டண உயர்வுடன், நீர்த் துறை மற்றும் நீர் வழங்கல் சபையில் தீவிர சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். இதில் சிறந்த முகாமைத்துவ நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல், நிறுவனத்திற்கு அளவிடக்கூடிய KPIகளை அமைத்தல் மற்றும் பாவனையாளர்களுக்கு பணத்திற்கு அதிக பெறுமதியை வழங்குவதற்காக செலவு மேம்படுத்தல் மூலோபாயத்தை பின்பற்றுதல் ஆகியவை அடங்கும்” என அமைச்சர் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply