அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 48 ஆவது வருடாந்த நீர் விளையாட்டு போட்டிகள் 2023 ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச நீச்சல் தடாக அரங்கில் நடைபெறவுள்ளன.
இதில் 200 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும், 5000இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை பாடசாலை நீர் விளையாட்டுகள் சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாடசாலைகளின் நீர் விளையாட்டுக்கள், சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டியானது நீச்சல் மற்றும் சுழியோட்டத்தில் திறமையுள்ள சிறுவர்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், 3010 ஆண்களும், 2088 பெண்களும் பங்கேற்கவுள்ள இந்த போட்டியில், வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி 10 பேர் கலந்துக்கொள்ளவுள்ளனர். 10 வயதுக்குட்பட்ட பிரிவு முதல், 20 வயதுக்குட்பட்ட பிரிவுகள் வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. 140 தனிநபர் போட்டிகளிலும், 24 குழு போட்டிகளும் அடங்கலாக 164 போட்டிகள் மொத்தமாக நடைபெறவுள்ளன.
மேலும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் அநிருத்த ரணசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.