தேசிய பிரச்சினைக்கு தீர்வுக்காண இதுவே சரியான தருணம் எனவும், உடனடியாக அதனை நிறைவேற்றுமாறும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தம் குறித்த பல்வேறு கருத்துக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (09.08) பாராளுமன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி உரையாற்றிய பிறகு அதனை இடைமறித்து பேசிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஆகிய மூவரிடமும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இதுவே சரியான தருணம். ஆகவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுக் காணுங்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய பிரச்சினைகள் பற்றியும், 13 ஆவது திருத்தம் குறித்தும் அது பற்றிய தமது நிலைப்பாட்டை மீண்டும், மீண்டும் கூறினாலும் கூட அரசாங்கப்பக்கத்தில் இருக்கக்கூடிய எம்பிக்கள் அவருக்கு ஆதரவளிக்க விரும்புகிறார்களா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. அதை நாங்கள் தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்.
அதேபோல சற்றுமுன்னர் பேசிய அமைச்சர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மகிந்த 13 பிளஸ் குறித்து பேசுவதாக தெரிவித்திருந்தார். மகிந்த ராஜபக்சவும் அதனை எதிர்க்கவில்லை. அப்படியென்றால் மகிந்த ராஜபக்ஷ இன்னனும் 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.
அப்படியென்றால் அந்த நிலைப்பாட்டிலேயே இருங்கள். ஒருதரம் 13 என்று சொல்கிறீர்கள், மறுதரம் 13 மைனஸ் என்று சொல்கிறீர்கள். அவ்வாறு மாறி மாறி பேசாமல் ஒரே நிலைப்பாட்டில் இருங்கள். அது முக்கியமானது.
மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு விடயம் ஞாபகத்தில் இருக்கும் என்று நினைக்கின்றேன். கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு, நான் அவரை சந்தித்தேன். அப்போது யுத்தத்தை நிறைவு செய்த காரணத்தினால், நீங்கள் அவர்கள் மத்தியில் ஒரு மகாநாயக்கராக கருதப்படுகிறீர்கள். அதற்கு வரலாறு உங்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறது. தயவு செய்து அதிகாரத்தை பகிர்ந்து தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காணுங்கள். அப்படியானால் மக்கள் உங்களை போற்றுவார்கள். ஆனால் நீங்கள் அதை செய்யத் தவறிவிட்டீர்கள். அதையிட்டு கவலையடைகின்றேன். இப்பொழுதாவது அதை செய்து முடிப்போம்.
குமார வெல்கம பேசும்போது, இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டே ஆகவேண்டும் எனக் கூறினார். வரலாற்றில் வழமையாக பச்சைக் கட்சி அரசியல் அமைப்பை திருத்த முயற்சிக்கும்போது, நீலக் கட்சி அதனை எதிர்க்கும். நீலக்கட்சி அரசியல் அமைப்பை திருத்த முயற்சிக்கும்போது பச்சைக் கட்சி எதிர்க்கும். ஆனால் தற்போது அப்படியல்ல.
வரலாற்றில் முதல் முறையாக எதிர்க் கட்சியானது நீங்கள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்களானால், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஆகவே இதுதான் சந்தர்ப்பம். 13 பற்றியும், அதன் அதிகாரங்கள் பற்றியும் பேசுவோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், 13 இல் உள்ள மாகாண சபை முறைமைகளை அரசியல் அமைப்பில் இருந்து அகற்றவே முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.