‘மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்’ – ஜனாதிபதி

நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதற்காக இரண்டு நூற்றாண்டுகளாக உழைத்து வரும் மலையக தமிழ் மக்களை தொடர்ந்தும் தனியான இனக் குழுவாக அன்றி இலங்கை சமூகத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்தப் பணி மிகவும் சவால் நிறைந்தது என்றாலும் இதனை இதற்கான வேலைத் திட்டமொன்று அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், பாராளுமன்ற உறுப்பினர் எம். ரமேஸ்வரன் ஆகியோருடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11.08) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலில், மலையகதத் தமிழ் மக்களுக்கே உரித்தான பிரச்சினைகள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மலையகத் தமிழ் மக்கள் பாடுபட்டதாகவும், இன்றும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுப்பதில் அவர்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்தார்.

1983 கலவரத்தின் பின்னரும் அந்த மக்கள் பிரிவினைவாத போக்குகளையோ அல்லது ஆயுதம் ஏந்திய பயங்கரவாத செயற்பாடுகளையோ கைக்கொள்ளவில்லை.மாறாக அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மீதும் தெற்கு சமூகத்தின் மீதும் நம்பிக்கையுடன் செயற்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மலையக தமிழ் மக்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்குவதற்காக ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து பிரதமர் என்ற வகையில் 2003 ஆம் ஆண்டில் செயற்பட்டதையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

அத்துடன், மலையக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில், மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அந்த மக்களை தொடர்ந்தும் மலையகத் தமிழர்களாகவோ அல்லது தோட்டப்புற மக்களாகவோ வாழ வைப்பதற்குப் பதிலாக இலங்கைசமூகத்தில் ஏனைய மக்களுடன் ஒன்றிணைப்பதே தமது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளார். தற்போதும் பெருந்தோட்டங்களில் இருந்து கொழும்புக்கு வந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் சமூகத்தில் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும், அனைத்து மக்களையும் சமூகத்துடன் ஒன்றிணைக்கும் சவாலை வெற்றியடையச் செய்வதில் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளுக்கு விசேட பங்களிப்பை ஆற்ற முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply