உலகக்கிண்ண 20-20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முதற் போட்டியாக நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது.
இதில் நிக்கொலஸ் பூரான் 40(22) ஓட்டங்களையும், ரொஸ்டொன் சேஸ் 39(46) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹெடி ஹசான், முஸ்தபிஸுர் ரஹமான், ஷொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது. இதில் 44(43) ஓட்டங்களையும் மஹமதுல்லா 31(24) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவி ராம்போல், ஜேசன் ஹோல்டர், அன்ட்ரே ரஸ்ஸல், அகீல் ஹொஸேயின், ட்வய்ன் பிராவோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில் அடுத்த சுற்றுக்கு தெரிவாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கிந்த்திய தீவுகள் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு இறுக்கமாக உள்ள போதும் அடுத்த சுற்றுக்கு தெரிவாக முடியாத நிலை ஏற்படவில்லை.
இந்த போட்டியின் நாயகனாக நிக்கொலஸ் பூரான் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாம் போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி மூன்றாவது தொடர்ச்சியான வெற்றியினை பெற்றுள்ளது. இதன் மூலம் அரை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தெரிவாகும் நிலையினை மிகவும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. இதில் குல்பதின் நைப் 35(25) ஓட்டங்களையும், மொஹமட் நபி 35(32) ஓட்டங்களையும், நஜிபுல்லா சத்ரன் 22(21) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இமாட் வசிம் 2 விக்கெட்களையும், ஷாஹீன் ஷாஹ் அப்ரிடி, ஹரிஸ் ரௌப், ஹசான் அலி, ஷதாப் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. இதில் பாபர் அசாம் 51(47) ஓட்டங்களையும், பக்கர் சமான் 30(25) ஓட்டங்களையும், ஆசிப் அலி ஆட்டமிழக்காமல் 25(7) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரஷீட் கான் 2 விக்கெட்களையும், நவீன் உல் ஹௌ, மொஹமட் நபி, முஜீப் அர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பாக்கிஸ்தான் அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நாயகனாக ஆசிப் அலி தெரிவு செய்யப்பட்டார்
இன்று பிற்பகல் 3:30இற்கு தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இரவு 7:30இற்கு அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
இன்று இலங்கை அணி வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பினை தக்க வைத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.