வவுனியா வைத்தியசலையில் அண்மையில் தாதியர்கள் பழிவாங்கும் நோக்கில் நடந்து கொண்டதாகவும், ஒரு குழந்தைக்கு உரிய முறையில் வைத்தியம் செய்யப்படவில்லை எனவும் முறையிட்டு தனது பிள்ளையை வெளியே அழைத்து செல்ல அனுமதி கோரிய நிலையில் குறித்த பிள்ளை 15 மணித்தியாலங்களின் பின்னர் வெளியே அழைத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்த சம்பம் தொடர்பில் விசாரணை செய்ய வட மாகாண ஆளுநர் மூன்று பேரடங்கிய குழுவை நியமித்துள்ளார். இந்த நிலையில் வட மாகாண சுகாதர பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் நிலக்சன் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளனர்.
குறித்த சந்திப்பில் குழந்தையின் தகப்பனார் வீடியோ அழைப்பில் பேசியதாகவும் அதன் மூலமாகவே இந்த பிரச்சினை ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேவேளை தாதியரின் நடைமுறைகள் மற்றும் இரவு நேரத்தில் சிகிச்சை பெறும் குழந்தை ஒன்றை வெளியே அனுப்பினால் இரவு நேரத்தில் குழந்தை ஒன்றை வைத்தியசாலை வெளியே அனுப்பிவிட்டதாக குற்றம் சுமத்துவார்கள் என்ற காரணத்தினால் அந்த குழந்தையை உடனடியாக அனுப்பி வைக்கவில்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும் பகல் வேளையில் தாமதிக்கபப்ட்டமைக்கான காரணத்தை ஊடகவியலார்கள் கோரிய வேளையில் அது தொடர்பில் தாம் ஆராய உள்ளதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் வட மாகாண பணிப்பாளர் சத்தியமூர்த்தியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அல்லது ஆய்வு உரிய முறையில் நடைபெறவில்லை அல்லது பூர்த்தியாகவில்லை என அவரது பதில்கள் மூலமாக தெளிவாகிறது.
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தவறு செய்துவிட்டால் அதற்காக சிகிச்சையளிக்க மாட்டோம் என தெரிவித்தமை தவறு. அவ்வாறு கூற முடியாது. தாதியர் நியமன சத்தியபிரமாணத்துக்கு முரணானது என தாதியர் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பிலும் சத்தியமூர்த்தி கருத்து கூறவில்லை.
இவ்வாறு தாதியருக்கு எதிராக குற்றம் சுமத்தப்படும் நிலையில் முதற்கட்ட ஆய்வுகள் நடாத்தப்படும். அதில் தாதியர் குற்றமிழைத்தாரா இல்லையா என்பது தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளில் உறுதியாக கூற முடியாது எனவும், முழுமையான விசாரணைகளின் பின்னரே அந்த முடிவுக்கும் வர முடியமெனவும், பிழை நடந்திருப்பின் சம்மந்தப்பட்டவருக்கு எதிராக தண்டனை வழங்கப்படுமெனவும் வைத்திய முகாமைத்துவத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுகாதர துறையாக இருக்கட்டும், அரச துறையாக இருக்கட்டும் எந்தவொரு சேவையையும் வழங்க மாட்டோம் என மறுக்கும் உரிமை எந்த அரச ஊழியருக்கும் கிடையாது. இது இலங்கை சட்ட திட்டங்களுக்கு முரணானது, தண்டனைக்குரிய குற்றமாகும்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் இரவு வேளையில் வீட்டுக்கு அனுப்ப முடியுமென வைத்தியர்கள் அனுமதித்தால் மறு நாள் காலை வேளையிலும், காலை வேளையில் அவ்வாறு அனுமதித்தால் பிற்பகல் வேளையிலும் தாதியர்கள் வீடு செல்வதற்கான தயார்படுத்தல்களை செய்து வீட்டுக்கு அனுப்பி வைப்பது சாதரணமாக வைத்தியசாலையில் நடைமுறையில் உள்ளது எனவும் அறிய முடிகிறது. அவசர நிலைகள் இருப்பின் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பின் அனுமதி வழங்கப்படும் எனவும், குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்க பெற்றோர் அனுமதி மறுத்தல் நீதிமன்ற அனுமதியுடன் குழந்தைகளை வைத்தியசாலை கட்டுப்பாட்டில் சிகிச்சை வழங்க முடியுமெனவும் சுகாதரதுறையினர் தெரிவிக்கின்றனர்.
பிழைகள் நடைபெற்றால் அதனை உரிய நிர்வாகம் ஏற்றுக்கொண்ட அதற்கு உரிய நடவடிக்கையினை எடுத்து முன் கொண்டு செல்வது எதிர்கால நடவடிக்கைகளுக்கு சிறந்தது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர் தன் தரப்பு பிழைகளை மறைத்து வைத்தியசாலை வட்டாரங்கள் முழுமையாக பிழை விட்டுள்ளதாகவே சமூக ஊடகம் மூலமாக தெரிவித்திருந்தார். அவரது முறையற்ற தொலைபேசி அழைப்பே இந்த சிக்க்கல்களுக்கான மூல காரணம் என்பதனையும் அவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த சம்பவம் வவுனியா வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களோடு தொடர்புபடுத்தப்படும் நிலை காணப்படுகிறது. வவுனியா வைத்தியசாலை நிர்வாகம் இதுபோன்ற பிழைகளை வளரவிடாமல் தடுத்தல் அல்லது அதற்கு உரிய நடவடிக்கையினை எடுத்தல் போன்றவற்றின் மூலமாக மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க இயலும். விமர்சனங்கள் எழாமல் தடுக்க இயலும்.
சம்பவங்களின் ஆரம்பப் புள்ளி, அதன் விளைவுகள் தொடர்பில் அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும். உரிய சமூக பொறுப்புடன் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். அதன் மூலாகவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.