ஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் டுஸ்மாந்த சமீர தெரிவு செய்யப்படவில்லை. கைமூட்டு தசைநாரில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் ஆசிய கிண்ண தொடருக்கான அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
31 வயதான வேகப்பந்து வீச்சாளர் டுஸ்மாந்த சமீர இலங்கை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர். ஆனால் உபாதைகள் காரணமாக இவரின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் மீண்டும் தடைபபட்டுக்கொண்டே செல்கிறது. LPL தொடருக்கு முன்னதாக கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக பல போட்டிகளில் அவர் விளையாடியிருக்கவில்லை. ஆசிய கிண்ணம் மற்றும் உலகக்கிண்ணம் ஆகிய நடைபெறவுள்ள நிலையில் LPL தொடரில் அவருக்கு ஏற்பட்ட உபாதை இலங்கை அணியின் தயார்படுத்தல்களில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
வனிந்து ஹஸரங்கவுக்கும் LPL தொடரில் உபாதை ஏற்பட்டுள்ளது. அவர் அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் உபாதை குணமடைந்தால் மாத்திரமே அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என அமைச்சரின் அனுமத்திக்காக வழங்கப்பட்டுள்ள அணியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓய்வற்ற தொடர்ச்சியான LPL போட்டிகள் தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் இந்த உபாதைகள் ஏற்பட்டு இலங்கை அணியின் முக்கிய போட்டிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மற்றும் தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசித்து 15 பேரடங்கிய அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக வீரர்கள் ஐவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.