திருகோணமலை ஜமாலியா பகுதியில் நேற்று (23.08) பொலிஸ் காவலில் இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை தக்வா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமாகாத இளைஞன் பொலிஸாரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்போது குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மீனவர் என பொலிஸார் தெரிவித்தனர். அவர் தான் அணிந்திருந்த சட்டையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பொலிஸார் தாக்கியதாலேயே குறித்த இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்றிரவு ஜமாலியா பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இன்று (24.08) காலை சடலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு குடும்பத்தின் உறவினர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து, சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை ஏற்கனவே திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.