இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்ட அணிக்குமிடையில் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை 19 வயது அணி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி மிக அபாரமாக துடுப்பாடிய அதேவேளை, பந்துவீச்சிலும் மிகவும் சிறப்பாக செயற்பட்டு அபார வெற்றி ஒன்றினை பெற்றுக் கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஜோர்டான் ஜோன்சன் 105(79) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ஜோஸுவா டோர்ன் 56 ஓட்டங்களையும், ரறீக் எட்வெர்ட் 53 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பாக சினெத் ஜயவர்தன 04 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 30.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் மல்ஷா திருப்பதி 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக டேஸ்வன் ஜேம்ஸ், இசை தோம் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என மேற்கிந்திய தீவுகள் அணி சமன் செய்துள்ளது.