லசந்தவை கொலை செய்ய சொன்னது கோட்டா!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இங்கிலாந்தின் சனல் 4 வெளியிட்ட காணொளியில், சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான புதிய பல விடயங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்பஉடுத்தியுள்ளது. இது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் குறித்த கொலை நிகழ்த்தப்பட்டதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள் குறித்து சனல் 4 டிஸ்பாட்ச் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் அதிர்ச்சியான தகவல்களை ஹன்சீர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2008 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவைக் கொல்ல உத்தரவிட்டதாக குறித்த ஆவணப்படத்தின் ஒரு கட்டத்தில் மௌலானா விவரிக்கிறார்.

மௌலானாவின் கூற்றுப்படி, கோட்டாபய ராஜபக்ச ஒருமுறை பிள்ளையானுடனான சந்திப்பின் போது ‘டிரிபோலி பிளாட்டூன்’ என்ற துணை இராணுவ கொலைக் குழுவை உருவாக்க உதவுமாறு கோரியதாகக் தெரிவித்துள்ளார்.

“கோத்தபாய பிள்ளையானிடம் தனது சிறந்த அணியைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஒன்றாக வேலை செய்யச் கூறியதாக தெரிவித்தார், எனவே பிள்ளையான் தனது சிறந்த ஆட்களைத் தேர்ந்தெடுத்து திரிபோலி படைப்பிரிவை உருவாக்கினார். அப்போது அரசுக்கு எதிரானவர்களை அந்த குழு தேர்வு செய்தது. பின்னர் அவர்கள் அத்தகையவர்களை குறிவைத்து அவர்களைக் கொன்றனர்” என்று மௌலானா மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச ஆட்சி மீதான லசந்தவின் தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் குறிப்பாக பிரபலமற்ற இராணுவ ஜெட் MiG டீல் பற்றிய அவரது அம்பலப்படுத்தும் கட்டுரை கோட்டாபயவை ஆத்திரமடையச் செய்ததாக மௌலானா தெரிவித்துள்ளார். மேலும், அவரையும் பிள்ளையானையும் வரவழைத்திருந்தார், அவர் லசந்தவை கொல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

“இந்த ‘பல்லா’ (நாய்) எப்போதும் என்னுடன் விளையாடுகிறது” லசந்த கொல்லப்பட வேண்டும்
எனவும் கோட்டாபய தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய ஐந்து திரிபோலி படைப்பிரிவு உறுப்பினர்களின் தொலைபேசிகள் மற்றும் அழைப்புத் தள பகுப்பாய்வுடன் கூடிய தொலைபேசி பதிவுகள் லசந்த கொல்லப்பட்ட இடத்துடன் பொருந்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தின் பின்னர் ஊடகவியலாளர் லசந்தவின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply