ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் இந்தியா அணி 41 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
சுப்பர் 04 சுற்றின் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இலங்கை அணியின் அபார சுழற் பந்துவீச்சு மூலமாக இந்தியா அணியை தடுமாற வைத்து இலங்கை அணி வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்தியது. இருப்பினும் அதனை விட சிறப்பாக இந்தியாவின் பந்துவீச்சு அமைய இலங்கை அணி வெற்றியிலக்கை பெற முடியுமால் தடுமாறி தோற்றுப்போனது.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் இந்தியா அணியின் பலமான துடுப்பாட்ட வரிசையை தகர்த்துக் கொடுத்ததும் துடுப்பாட்ட வீரர்கள் சரியாக துடுப்பாடாமை இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
தனஞ்சய டி சில்வா இன்று சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் அவருக்கு இணைப்பாட்டம் வழங்க முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமல் போனதும் பின்னடைவே. இறுதி நேரத்தில் டுனித் வெள்ளாளகே போராடினார்.
சோர்ந்து போயிருந்த ரசிகர்களுக்கு தனஞ்சய-டுனித் ஜோடி உற்சாகம் ஒன்றை வழங்கியது. இருவரும் 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். பந்துவீச்சில் அசத்திய டுனித் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டார். இந்த தொடரில் இரண்டாவது தடவையாக சிறப்பாக துடுப்பாடியுள்ளார். இந்த இருவரும் துடுப்பாடிய வேளையில் இலங்கை அணி பக்கமாக வெற்றி வாய்ப்பு திரும்பியது. தனஞ்சய ஆட்டமிழக்க வாய்ப்பு மீண்டும் இந்தியா பக்கமாக மாறியது. டுனித் தனது கூடுதல் ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டார்.
பெறக்கூடிய இலக்கான 214 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணியின் முன் வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்கள் பொறுப்பற்ற, நுட்பமற்ற துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். இடதுகர சுழற்பந்துவீச்சாளர்கள் மூவர் உள்ள அணிக்கெதிராக, இடதுகர துடுப்பாட்ட வீரர்கள் நிதானம் காத்து துடுப்பாடியிருக்க வேண்டும். டிமுத் கருணாரட்ன ஓட்டங்களை பெறாமல் பந்துகளை அதிகம் சந்தித்தமை அவருக்கு அழுத்தத்தை வழங்க ஆட்டமிழந்தார். அனுபவம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பாக துடுப்பாடியிருந்தால் இலகுவான வெற்றி கிடைத்திருக்கும்.
சதீர சமரவிக்ரம போர்மில் இருந்த துடுப்பாட்ட வீரர். ஓட்டங்களை ஓரளவு பெற ஆரம்பித்த நிலையில் முன்னோக்கி சென்று துடுப்பாட எத்தனித்த ஆட்டமிழந்தார். தேவையில்லாத துடுப்பாட்ட பிரயோகம் அவரை ஆட்டமிழக்க செய்தது. பொறுமை காத்து துடுப்பாடும் நுட்பமினமை இலங்கை துடுப்பாட்டதில் இருக்கும் பாரிய பிரச்சினையாகும்.
மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாறிப்போனது. இந்தியா பக்கமாக வெற்றி வாய்ப்பு மாறியது.
இந்தியா அணியின் ஆரம்ப பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ் ஆகிய இருவரும் அபாரமாக, ஆக்ரோஷமாக பந்துவீசினார்கள். அவர்கள் வழங்கிய அழுத்தமே இந்தியா அணி விக்கெட்களை கைப்பற்ற காரணமாக அமைந்தது.
பாகிஸ்தான் அணியுடன் 5 விக்கெட்களை கைப்பற்றிய குல்தீப் யாதவ் இந்தப் போட்டியிலும் அபாரமாக பந்துவீசினார். ரவீந்தர் ஜடேஜாவும் விக்கெட்களை கைப்பற்றினார். இந்தியாவின் சகல பந்துவீச்சாளர்களும் சிறப்பாகவே பந்துவீசினார்கள்.
இந்தியா அணியின் ஆரம்பம் இன்றும் சிறப்பாக அமைந்தது. 80 ஓட்டங்கள் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. இதில் 19 ஓட்டங்களை மாத்திரமே சுப்மன் கில் பெற்றுக்கொண்டார். ரோஹித் ஷர்மா ஒரு பக்கமாக வேகமாக அடித்து ஓட்டங்களை உயர்த்தினார். ஆனால் இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்ட பின்னர் இந்தியா அணியை டுனித் வெல்லாளகே உருட்டி எடுத்தார். அவர் விட்ட குறையை சரித் அசலங்க செய்து முடித்தார். சரித் அசலங்க தனது சிறந்த பந்துவீச்சு பெறுதியை பெற்றுக் கொண்டார்.
இந்தியா அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்தியா அணி இடதுகர சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு வழமையாக தடுமாறுவது போல இன்றும் டுனித் வெல்லாளகேயின் பந்துவீச்சில் முதல் விக்கெட்டினை இழந்தது. அடுத்த ஓவரிலேயே அவர் விராத் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தினார். மூன்றாவது ஓவரில் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டினை டுனித் வெல்லாளகே கைப்பற்ற இந்தியா அணி தடுமாற ஆரம்பித்தது.
இடதுகர துடுப்பாட்ட வீரர் ஒருவர் நான்காமிலக்கத்தில் துடுப்பாட வேண்டும் என்ற காரணத்தினால் இஷான் கிஷன் நான்காமிடத்திலும் லோகேஷ் ராகுல் ஐந்தாமிடத்திலும் இன்று துடுப்பாட களமிறங்கினர்.
மூன்று விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் தடுமாறிய இந்தியா அணியின் வேகம் மிகவும் சடுதியாக வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் ராகுல், இஷன் கிஷன் இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். 62 ஓட்டங்களாக இணைப்பாட்டம் காணப்பட்ட வேளையில் லோகேஷ் ராகுலின் விக்கெட்டை டுனித் வெல்லாளகே கைப்பற்றி முதல் நான்கு விக்கெட்களையும் தகர்த்தார்.
டுனித் நான்கு விக்கெட்களை கைப்பற்றி முடிக்க ஐந்தாவது விக்கெட்டை சரித் அசலங்க கைப்பற்றினார்.
தனது இறுதிப் பந்தில் ஐந்தாவது விக்கெட்டாக ஹார்டிக் பாண்ட்யாவை ஆட்டமிழக்க செய்து இன்றைய இலங்கையின் ஹீரோவாகா மாறினார் டுனித் வெல்லாளகே. டுனித் ஆசிய கிண்ண தொடரில் கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சிறப்பாக பாவித்துள்ளார். இன்று அவர் கைப்பற்றிய விக்கெட்கள் அவர் நினைவில் வைக்கக்கூடிய முக்கிய விக்கெட்கள் ஆகும். இதுவே அவரின் முதல் 05 விக்கெட் பெறுதியாகும். அத்தோடு இலங்கை அணி சார்பாக 5 விக்கெட்களை கைப்பற்றிய வயது குறைந்த பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சரித் அசலங்கவும் இன்று மிக சிறப்பாக பந்துவீசி ஓட்டங்களை வழங்காமல் 04 விக்கெட்களை தகர்த்துக் கொடுத்தார். இதுவே அவரின் சிறந்து பந்துவீச்சு பெறுதியாகும்.
இன்று பெற்றுக் கொண்ட அரைச்சதம் மூலம் ரோஹித் ஷர்மா 10,000 ஓட்டங்களை பூர்த்தி செய்த 15 ஆவது வீரராகவும், ஆறாவது இந்திய வீரராகவும் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அத்தோடு 10,000 ஓட்டங்களை வேகமாக கடந்த இரண்டாவது வீரராகவும் ரோஹித் மாறியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தமக்கான இறுதிப் போட்டி வாய்ப்பை பெற்றுள்ளது. இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் வெற்றி பெறுமணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி- லோகேஷ் ராகுல் | ஜஸ்பிரிட் பும்ரா | 40 | 60 | 5 | 0 |
| டிமுத் கருணாரட்ன | பிடி- சுப்மன் கில் | மொஹமட் ஷிராஜ் | 18 | 17 | 2 | 0 |
| குசல் மென்டிஸ் | பிடி- சூர்யகுமார் யாதவ் | ஜஸ்பிரிட் பும்ரா | 15 | 16 | 3 | 0 |
| சதீர சமரவிக்ரம | St. லோகேஷ் ராகுல் | குல்தீப் யாதவ் | 17 | 31 | 1 | 0 |
| சரித் அசலங்க | பிடி- லோகேஷ் ராகுல் | குல்தீப் யாதவ் | 22 | 35 | 2 | 0 |
| தனஞ்சய டி சில்வா | பிடி- சுப்மன் கில் | ரவீந்தர் ஜடேஜா | 41 | 66 | 5 | 0 |
| தஸூன் ஷானக | பிடி- ரோஹித் ஷர்மா | ரவீந்தர் ஜடேஜா | 09 | 13 | 1 | 0 |
| டுனித் வெல்லாளகே | Run Out | 42 | 46 | 3 | 1 | |
| மஹீஸ் தீக்ஷண | பிடி- சூர்யகுமார் யாதவ் | ஹார்டிக் பாண்ட்யா | 02 | 14 | 0 | 0 |
| கஸூன் ரஜித | Bowled | குல்தீப் யாதவ் | 01 | 02 | 0 | 0 |
| மதீஷ பத்திரன | குல்தீப் யாதவ் | 00 | 02 | 0 | 0 | |
| உதிரிகள் | 15 | |||||
| ஓவர் 41.3 | விக்கெட் 10 | மொத்தம் | 172 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| ஜஸ்பிரிட் பும்ரா | 07 | 01 | 30 | 02 |
| மொஹமட் ஷிராஜ் | 05 | 02 | 17 | 01 |
| ஹார்டிக் பாண்ட்யா | 05 | 00 | 14 | 01 |
| குல்தீப் யாதவ் | 9.3 | 00 | 43 | 04 |
| ரவீந்தர் ஜடேஜா | 10 | 00 | 33 | 02 |
| அக்ஷர் பட்டேல் | 05 | 00 | 29 | 00 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரோகித் சர்மா | Bowled | டுனித் வெல்லாளகே | 53 | 48 | 7 | 2 |
| சுப்மன் கில் | Bowled | டுனித் வெல்லாளகே | 19 | 25 | 2 | 0 |
| விராட் கோலி | பிடி- தஸூன் சாணக்க | டுனித் வெல்லாளகே | 03 | 12 | 0 | 0 |
| இஷன் கிஷன் | சரித் அசலங்க | 33 | 61 | 1 | 1 | |
| லோகேஷ் ராகுல் | பிடி-டுனித் வெல்லாளகே | டுனித் வெல்லாளகே | 39 | 44 | 2 | 0 |
| ஹார்டிக் பாண்ட்யா | பிடி- குஷல் மென்டிஸ் | டுனித் வெல்லாளகே | 05 | 18 | 0 | 0 |
| ரவீந்தர் ஜடேஜா | பிடி- குஷல் மென்டிஸ் | சரித் அசலங்க | 04 | 19 | 0 | 0 |
| அக்ஷர் பட்டேல் | பிடி- சதீர சமரவிக்ரம | மஹீஸ் தீக்ஷண | 26 | 36 | 0 | 1 |
| ஜஸ்பிரிட் பும்ரா | Bowled | சரித் அசலங்க | 05 | 12 | 0 | 0 |
| குல்தீப் யாதவ் | பிடி- தனஞ்சய டி சில்வா | சரித் அசலங்க | 00 | 01 | 0 | 0 |
| மொஹமட் ஷிராஜ் | 05 | 19 | 0 | |||
| உதிரிகள் | 21 | |||||
| ஓவர் 49.1 | விக்கெட் 10 | மொத்தம் | 213 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கஸூன் ராஜித | 04 | 00 | 30 | 00 |
| மஹீஸ் தீக்ஷண | 09 | 01 | 40 | 00 |
| தஸூன் சாணக்க | 03 | 00 | 24 | 00 |
| மதீஷ பத்திரனே | 03 | 00 | 27 | 00 |
| டுனித் வெல்லாளகே | 10 | 01 | 40 | 05 |
| தனஞ்சய டி சில்வா | 10 | 00 | 28 | 00 |
| சரித் அசலங்க | 09 | 01 | 18 | 04 |
அணி விபரம்
இந்தியா அணி ஷர்டூல் தாகூரை நிக்கி அவருக்கு பதிலாக அக்ஷர் பட்டேலை அணியில் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியா அணியின் துடுப்பாட்டம் பலம் பெறுவதுடன், சுழற்பந்துவீச்சு மேலும் பலமடைகிறது.
இலங்கை அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது.
இந்தியா
ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ், லோகேஷ் ராகுல்
இலங்கை
டிமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, தஸூன் சாணக்க, டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, மதீஷ பத்திரனே, கஸூன் ராஜித, சரித் அசலங்க
சூர்யகுமார் யாதவ்