தமிழகத்தில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பங்களுக்கு, மறுவாழ்வு முகாம்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1,500 வீடுகளை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் இவ்வாறு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை மக்களுக்காக, 79.70 மில்லியன் இந்திய ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1,591 வீடுகள் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, கோவை, ஈரோடு, சேலம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல பகுதிகளிலும் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் மக்களுக்கான அகதிகள் முகாம்களுக்கு மறுவாழ்வு முகாம்கள் என்று பெயரிட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக மேலும் 3,510 புதிய வீடுகளை நிர்மாணிக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.