வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை மற்றும் அபிவிருத்திக்கும் தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகள் நிச்சயம் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸுக்கு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.
அண்மையில் கொழும்புவில் உள்ள நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் அமைச்சர் ஜீவன் தொண்டமானை வட மாகாண ஆளுனர் திருமதி ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய போதே இந்த உறுதியை அமைச்சர் வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள கிராமங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தன்னிடம் வட மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்தார் எனவும், வடக்கின் தற்போதைய நிலைவரம் பற்றியும் அவர் தனக்கு தெளிவுபடுத்தினார் எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் தெரிவித்த விடயங்களை கேட்டறிந்துகொண்டதோடுவிரைவில் வட பகுதிக்கு நேரில் வருவதாகவும், மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் உறுதியளித்தேன் எனவும் மேலும் ஜீவன் தெரிவித்துள்ளார்.