மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியங்களைப் பெறுவதற்கும் அது தொடர்பான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஜப்பானிய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இருநூறு மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவி வழங்குதல், குளிர்பதனக் கிடங்கு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடித் துறையை நவீன இலத்திரனியல் உபகரணங்களுடன் மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் பொருட்களின் உயர் பெறுமதி சேர்ப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கத்தின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மானியத்தின் கீழ், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கான குளிரூட்டி இயந்திரங்கள், இலங்கை மீன்பிடித் துறைமுக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்திற்கான டிஜிட்டல் எடைத் தராசுகள், தேசிய மீன்வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கான மீன்பிடி வலைகள், முன்னரே தயாரிக்கப்பட்ட குளிர்சாதன பெட்டிகள் கொண்ட டிரக்குகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மானியங்களைப் பெற்று அது தொடர்பான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.