கொழும்பு, பம்பலப்பிட்டிய இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பாடசாலை தரப்பினரால் அழைக்கப்படாமல், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கலந்து கொண்டதாகவும், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பழைய மாணவர் சங்க உபதலைவர் லக்ஸயன் என்பவரை எல்லோரின் முன்னிலையிலும் தாக்க முயன்றமை தொடர்பிலும் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் தங்கள் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ள அதேவேளை, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினரும், தனியார் வாகன உரிமையாளருமான பாலசுரேஷ் ஒழுக்கயீனமாக நடந்துள்ளதாகவும் அதற்கு அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினரும், தனியார் வாகன உரிமையாளருமான பாலசுரேஷ் என்பவர் பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட புகாரின் அடிப்படையில் வாகன தரிப்பிட விவகாரம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர், உப அதிபர், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், தனியார் வாகன சாரதிகள் ஆகியோருக்கு இடையில் அண்மையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போதே பாராளுன்ற உறுப்பினர் மனோ கணேசன் அழைப்பின்றி கலந்து கொண்டு அமைதியின்மையை ஏற்படுத்தியதாக பழைய மாணவர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்ற முடிவு அபிவிருத்தி சங்க கூட்டத்தில் ஏகமானதாக எடுக்கப்பட்ட நிலையில், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் இவ்வாறான முறைப்பாட்டை மேற்கொண்டதும், பாராளுமன்ற உறுப்பினரை அழைத்து வந்து பாசாலைக்குள் அமைதியின்மையை தோற்றுவித்தமைக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் மேலும் கோரப்பட்டுள்ளது.
இந்துக்கல்லூரிக்கு அண்மித்த லெயார்ட்ஸ் வீதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்பில் தனக்கு பெற்றோர் முறையிட்டுள்ளதாகவும், பாடசலை சமூகத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் அந்த இடத்திலேயே வாகனங்களை நிறுத்த வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளதாகவும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் அந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாகவும், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலும் அது தொடர்பில் பேசவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளதாக ஊடமொன்று நேற்று(10.11) செய்தி வெளியிட்டுள்ளது.
“கொழும்பு மாநகரத்தில் அமைந்துள்ள அனைத்து சிங்கள மற்றும் தனியார் பாடசாலைகளின் மாணவர் போக்குவரத்து வாகனங்கள் அவ்வந்த பாடசாலைகளுக்கு அருகாமையில் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில் பம்பலப்பிட்டி இந்து கல்லூரி தமிழ் மாணவரின் பெற்றோர் தெரிவு செய்து அனுப்பும் வாகனங்களை மாத்திரம், கடற்கரையோர (Marine Drive) வீதியில் நிறுத்தி வைக்க எடுக்கப்பட்ட பாரபட்ச முயற்சி தொடர்பில் பெற்றோர் எனக்கு புகார் செய்துள்ளனர். இதையடுத்து, இந்த பாரபட்ச முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளேன்” எனவும் மேலும் குறித்த ஊடகத்தின் செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.