கிரிக்கெட் பிரச்சினைக்கு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தீர்வு கிடைக்கும் – ரொஷான் ரணசிங்க

கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைக்கு இம்முறை தீர்வு கிடைக்காவிடின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தீர்வு காணப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும், கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்கு அறிக்கையின்படி, திருடியதாக நிரூபிக்கப்பட்ட ஊழல்வாதிகளையும் ஊழல் கும்பலையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் எனவும், இப்போது செய்ய முடியாவிடின், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அது சரி செய்யப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மாநாட்டிற்கு சென்ற ஜனாதிபதி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார், ஊழலை ஒழிப்பதற்காக பாடுபடும் எனக்கு எதிராக ஏன் செயற்படுகிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னை தன் மனைவி பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ வழி விடுமாறும், அகதி அந்தஸ்து கோரி வேறு நாட்டிற்கு தாவ தாம் தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் வீதியில் கொல்லப்படலாம் எனவும், அது இன்றா? நாளையா என்பது தெரியாது எனவும், அப்படி நடந்தால் ஜனாதிபதி முதல், சாகல ரத்நாயக்க வரை அனைவரும் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply