மன்னாரில் கனிய மண் அகழ்வுக்கு அரசு சம்மந்தமா?

மன்னார் தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய மண்ணகழ்வுத் திட்டம் மற்றும் தொடர்ந்து நிறுவப்பட்டு வரும் காற்றாலைக் கோபுரங்கள் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள் மூலம் மன்னார் தீவு பாரிய அழிவினை எதிர் நோக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மன்னார் பிரஜைகள் குழுவினால் நேற்று (09.12) காலை நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அதன் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“மன்னாரில் கனிய வள மணல் அகழ்வுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதனை அறிவதற்காகத் தகவலறியும் சட்டத்தினூடாக கடந்த 29/12/2021 விளக்கம் கோரி விண்ணப்பித்திருந்தோம். அதற்கான விளக்கத்தை வழங்குவதாக 10/01/2022 அன்று அரச தரப்பிடமிருந்து பதில் வந்த போதிலும் இது வரை எந்த விதமான விளக்கங்களும் எமக்கு வழங்கப்படவில்லை” என மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

“இது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் விளக்கம் கோரிய போதும் எவ்வித பதிலும் எமக்கு கிடைக்கவில்லை எனவும், மேற்படி விடயம் தொடர்பாக மன்னார் பிரதேச செயலகத்திடமும் நாங்கள் வினவியிருந்த போதும் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை எனவும் தொடர்ச்சியான தமது முயற்சிகள் தோல்வியிலேயே முடிவுறுகிறது.

எனவே இந்த பாரிய அழிவுக்கு அரசும் சம்மந்தப்படுகின்றதா? என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியிலும், எங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது” என இந்த ஊடக சந்திப்பில் மார்க்கஸ் அடிகளார் மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாகக் கருத்துரைத்த பிரஜைகள் குழு உறுப்பினர்கள், மன்னார்த்தீவினை இப்பேரழிவிலிருந்து காப்பாற்ற உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மக்கள் மத்தியில் இதுதொடர்பான விழிப்பு ஏற்படுத்த வேண்டுமெனவும் பாரிய மண்ணகழ்வினால் கடல் நீர் நன்னீருடன் கலக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறினர்.

மேற்படி சந்திப்பில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார், செயலாளர் எஸ்.செசாரியஸ் மற்றும் பிரஜைகள் குழு உறுப்பினர்களான எஸ்.ஏ. அசீம், (மூர் வீதி பெரிய பள்ளிவாசல்) எஸ்.ஜேம்ஸ் ஜேசுதாசன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

Social Share

Leave a Reply