வாழ்க்கைச் செலவின உயர்வு உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் இன்று (16/11) அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவில்;, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.
இருப்பினும் நேற்றைய தினம் (15/11) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனுவிற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தவிர்ந்த 5 நீதிமன்றங்கள் தடை விதித்திருந்தன.
எது எவ்வாறாயினும், திட்டமிட்டப்படி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை பொதுக்கூட்டங்கள், ஒன்றுக்கூடல்கள் மற்றும் களியாட்டங்களுக்குத் தடை விதித்து புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய சுகாதார வழிக்காட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய சுகாதார வழிக்காட்டல்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.