நுவரெலியா மாவட்டத்தின் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிகள் மூவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவிகள் பாடசாலையின் ஆய்வு கூடத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கித்துல்லே, பல்லேதோவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், குறித்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவிகளிடம் இருந்து கிடைத்த தகவலுக்கமைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணவி ஒருவரிடம் வட்ஸ்அப் மூலம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் பாடசாலை மாணவிகள் மூவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.