இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டவது டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளின் மதிய போசன இடைவேளைக்கு முன்னதாக நிறைவடைந்துள்ளது. வேகமாக நிறைவடைந்த டெஸ்ட் போட்டியாக பதிவு செய்யப்பட்ட போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. தென்னாபிரிக்கா நியூலாண்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய 7 போட்டிகளில் பெற்றுள்ள முதல் வெற்றியாக இது அமைந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 23.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 55 ஓட்டங்களை பெற்றது. இதுவே தென்னாபிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட குறைவான ஓட்ட எண்ணிக்கையாகும். துடுப்பாட்டத்தில் யாரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 6 விக்கெட்களையும், ஜஸ்பிரிட் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 34.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 153 ஓட்டங்களை பெற்று 98 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இந்தியா அணி 153 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்த போது அதே ஓட்ட பெறுதியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரே ஓட்டப் பெறுதியில் கூடுதலான விக்கெட்கள் வீழத்தப்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது. இதில் விராத் கோலி 46(59) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 39(50) ஓட்டங்களையும், ஷுப்மன் கில் 36(55) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ககிஸோ றபாடா, நன்றே பேர்கர், லுங்கி ங்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 36.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களை பெற்று இந்தியா அணிக்கு 79 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நிர்ணயித்தது. இதில் எய்டன் மார்க்ரம் 106(103) ஓட்டங்களை பெற்றார். இது அவரின் 7 ஆவது சதமாகும். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 6 விக்கெட்களையும், முகேஷ் குமார் 2 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
79 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இந்தியா அணி 12 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களை பெற்றது. இதில் யஷஷ்வி ஜெய்ஸ்வால் 28(23) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ககிஸோ றபாடா, மார்கோ ஜென்சன், நன்றே பேர்கர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியில் பெறப்பட்ட 464 ஓட்டங்கள் இரண்டு அணிகளுக்குமான டெஸ்ட் போட்டி ஒன்றில் பெறப்பட்ட குறைவான மொத்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது. அத்தோடு டெஸ்ட் வரலாற்றில் வேகமாக நிறைவடைந்த டெஸ்ட் போட்டியாகவும் இது பதிவாகியுள்ளது. 642 பந்துகளில் இந்தப் போட்டி நிறைவடைந்தது. இதற்கு முன்னர் 1931 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி மெல்பேர்னில் நிறைவடைந்திருந்தது.