நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு ஜப்பான் நிதி அமைச்சர் பாராட்டு..!

இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள சிறந்த முன்னேற்றங்களுக்கு ஜப்பான் நிதி அமைச்சர் SUZUKI Shunichi பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி மற்றும் பணவீக்க குறிகாட்டிகளில் காணக்கூடிய முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய ஜப்பான் நிதியமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் பலனாகவே அந்த முன்னேற்றங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜப்பான் நிதியமைச்சர் SUZUKI Shunichi , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

ஜப்பான் – இலங்கை பொருளாதார உறவுகளை பலப்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே ஜப்பான் நிதி அமைச்சர் இலங்கைக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதரத்தை நிலைப்படுத்தி மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் கடன் நிலைப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தி பல்வேறு சிறப்பான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொண்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கையின் கடன் நீட்டிப்பு முயற்சிகளுக்கு ஜப்பான் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கு ஜப்பான் யென்களாக வழக்கப்பட்டுவந்த கடன்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஜப்பான் நிதி அமைச்சர், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் சங்கத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மேற்பார்வையின் பின்னர் கடன் நிலைத் தன்மை தொடர்பில் அறிவிப்பு விடுத்ததன் பின்னர் கடன்களை மீள வழங்கும் இயலுமை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் கடல் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும், இலங்கையின் எதிர்கால பயணத்திற்காக ஜப்பானினால் வழங்குவதற்கு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply