இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்று வருகை தந்துள்ள இரண்டு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும், ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று (16) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சாற்றிதழ் பத்திரங்களைக் கையளித்து தங்களது பணிகளை உத்தியோகபூர்வமா ஆரம்பித்தனர்.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவராக – ஹிடேகி மிஸுகொஷி (Hideaki Mizukoshi) , தாய்லாந்துத் தூதுவராக பொஜ் ஹான்பொல் (Poj Harnpol), தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகராக, சன்டில் எட்வின் சல்க் (Sandile Edwin Schalk) ஆகியவர்களுமே புதிதாக நியமனம் பெற்றுள்ளவர்களாவார்கள்.
இலங்கை மற்றும் தமது நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை, புதிய துறைகளின் ஊடாக மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக, ஜனாதிபதியிடம் புதிய இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.
கொவிட் தொற்றுப் பரவலின் ஆரம்பம் முதல் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், தடுப்பூசி ஏற்றல் தொடர்பாகப் பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் கொவிட் தொற்று நிலைமையுடன் பொருளாதார முகாமைத்துவத்தின் போது முகங்கொடுக்க நேரிட்டுள்ள சவால்கள் பற்றி, ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளிடம் தெளிவுபடுத்திய அதேவேளை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்துச் செயற்படுதல் மற்றும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
தமது அரசாங்கம் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கும் விதத்தைத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இந்நாட்டின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு, அந்நாடுகளின் முதலீட்டாளர்களுக்குச் சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவித்ததோடு,
சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் பசுமை விவசாயத்தை உருவாக்குதல் மற்றும் இந்நாட்டு சக்திவலுத் தேவைக்கான அதிக பங்களிப்பை, மீள்பிறப்பாக்கச் சக்திமூலங்களில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியதோடு, தொழில்நுட்பம் மற்றும் திறன் வசதிககளை எமது நாட்டுக்கு வழங்க ஒத்துழைப்பு வழங்குமாறும், ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கையினை முன் வைத்தார்.