நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை தவிர்த்து வேறு மாற்று வழிகள் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து குறித்த வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி மாதத்தின் பின்னர் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும், அதனை சீர்குலைக்க சில தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளை இனங்கண்டு தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் இவ்வாறு கருத்து தெரிவித்தார்,
“இலங்கையைப் போன்று சுமார் 75 அரசியல் கட்சிகள் இருக்கும் நாடு உலகில் வேறு எங்கும் இல்லை. அதனால் நம் நாட்டில் பிளவுகள் உருவாகியுள்ளன.இதன் காரணமாக நாட்டில் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளது.
இந்நிலை சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் பல அழிவுகளுக்கும் வழிவகுத்தது. இந்த கட்சிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது? யார் செலவு செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க எந்த முறைமையும் இல்லை. எனவே இந்தக் கட்சிகள் எவ்வாறு தேர்தலில் பணத்தை செலவிடுகின்றன என்பதை கண்டறியக் கூடிய சட்டமூலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதற்குக் காரணம், அதலபாதாளத்திற்குச் சென்ற நாட்டை சுமார் ஒரு வருடமும் ஆறு மாதங்களில் மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு சென்றமையால் ஆகும். ஜனாதிபதி ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தையும் அந்த நோக்கத்திற்காக திறம்பட பயன்படுத்தினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.