இம்ரான் கானின் திருமணத்துக்காக சிறை தண்டனை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவருமான இம்ரான் கானின் மூன்றாவது திருமணம் சட்டத்தை மீறியது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதுடன் அவருக்கும் அவரது மனைவியான புஸ்ரா பீபிக்கும் 7 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு புஸ்ரா பீபியை இம்ரான் கான் திருமணம் செய்து கொண்டார். புஸ்ரா பீபியின் முன்னாள் கணவர் இந்த திருமணம் தொடர்பில் மேற்கொண்ட முறையீட்டின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சட்டத்தின் அடிப்படையில் கணவன் இறந்தாலோ அல்லது விவாகரத்து செய்து கொண்டாலோ குறிப்பிட்ட காலத்துக்கு பெண் திருமணம் செய்து கொள்ள முடியாது. குறித்த காலம் நிறைவடைய முன்னரே புஸ்ரா பீபி, இம்ரான் கானை திருமணம் செய்துகொண்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இம்ரான் கான் 1995 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித் என்பவரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளின் பின்னர் 9 வருடத்தில் விவாகரத்து செய்து கொண்டார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஊடகவியலார் ஒருவரை திருமணம் செய்து ஒரு வருடத்துக்குள் விவாகரத்து செய்துகொண்டார்.

இம்ரான் கான் ஊழல் மேற்கொண்டதாக ஏற்கனவே கடந்த புதன்கிழமை 10 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ள நிலையிலேயே இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரது மனைவி வீட்டுக்காவலில் சிறை தண்டனையை அனுபவிக்க முடியுமென நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Social Share

Leave a Reply