இலங்கையின் தேசியக் கொடி இன்னும் தமிழர்களை அரவணைக்கவில்லை – ஸ்ரீதரன்..!

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

பெண்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் பொலிஸார் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டதாகவும்; குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த பேரணியை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் பேரணி வந்த சாலையை மறித்த போது அதனை மீறி செல்ல முற்பட்ட போது பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டு பேரணிணை கலைத்ததுடன், பல்கலைக்கழக மாணவர்களையும் கைது செய்தனர்.

இதன்போது “வரலாறு மீண்டும் ஒரு முறைய பொலிஸாரின் அராஜகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸார் இல்லாமல் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் , தூக்கி வீச்சப்பட்டும் அடித்தும் துன்புறுத்தப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்பதில் போராட்டகாரர்கள் உறுதியாக இருந்ததுடன் மாணவர்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர் போராட்டம் முடிவுக்கு வரப்பட்டது.

இன்றைய சம்பவம் இலங்கை அரசின் கோர முகத்தை சர்வதேச சமூகத்திற்கு காட்டியதாவும். இலங்கையின் தேசியக் கொடி இன்னும் தமிழர்களை அரவணைக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கவலை வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது, அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட வேளை பொலிஸார் ஒருவர் தன் மீது தாக்குதல மேற்கொண்டதாகவும் அதற்கான காணொளி ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply