இலங்கை அணிக்கு வெற்றி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (09.02) முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டி கண்டி, பல்லேக்கலவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிசங்க ஆட்டமிழக்காமல் 210(139) ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 88(88) ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 45(36) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பரீட் அஹமட் 2 விக்கெட்களை கைப்பற்றினார். பத்தும் நிசங்க அவரது முதலாவது இரட்டைச்சதத்தையும் இலங்கை அணிக்காக அடிக்கப்பட்ட முதலாவது இரட்டைச்சதத்தையும் பூர்த்தி செய்தார். இதற்கு முதல் சனத் ஜயசூரிய 189 ஓட்டங்களை பெற்றிருந்தார். சர்வதேச ரீதியில் பெறப்பட்ட பன்னிரண்டாவது இரட்டை சதம் இது. 10 ஆவது வீரராக தன் பெயரை பத்தும் நிஸ்ஸங்க பதிவு செய்துள்ளார். பத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 182 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். 3 ஆவது விக்கெட் இணைப்பட்டாமாக பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம ஆகியோர் 120 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் 5 விக்கெட்ளையும் 55 ஓட்டங்களுக்கு இழந்தனர். ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அஷ்மதுல்லா ஓமர்ஷாய் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் 242 ஓட்டங்களை பகிர்ந்தனர். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது. இதில் அஷ்மதுல்லா ஓமர்ஷாய் ஆட்டமிழக்காமல் 149(115) ஓட்டங்களையும், மொஹமட் நபி 136(130) ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் ப்ரமோட் மதுஷான் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இது ப்ரமோட் மதுஷானின் சிறந்த பந்துவீச்சு பெறுதி ஆகும். இந்த வெற்றியின் மூலமாக இலங்கை அணி தொடரை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply