மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விடுவிப்பதற்கு சுகாதார அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையெனஅரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இயந்திரம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
உரியளவிலான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் இத்தகைய இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட வேண்டும் எனினும் விமான நிலைய களஞ்சியசாலைகளில் அவ்வாறான நிலை உள்ளதா என்பது கேள்விக்குறியே என சங்கத்தின் தலைவர் திரு.சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளால் இயந்திரத்தின் செயற்பாடு பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் இயங்கி வரும் CT ஸ்கேன் இயந்திரம் 18 வருடங்கள் பழைமையானது என்பதால் குறைந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மாத்தறை மாவட்டத்திலேயே மாத்தறை பொது வைத்தியசாலையில் சி.டி பரிசோதனை வசதி உள்ளதால், கொழும்பு தேசிய வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு எடுத்துச் செல்ல தயாராக இருந்த இந்த இயந்திரத்தை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு வழங்க சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.