தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மனோ கணேசனின் கோரிக்கைக்கு அமைய, கனடா தமிழர் பேரவையின் நிதி பங்களிப்பினால் தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்களிடமிருந்து கனடா தமிழர் பேரவையினால் சேகரிக்கப்பட்ட நிதியின் ஊடாக விஞ்ஞான ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், கனடா தூதுவர் எரிக் வெல்ஷ், கனடா தமிழர் பேரவை நிர்வாகிகளான டென்டன் துரைராஜா, துஷ்யந்தன், உமாசுதன் சுந்தரமூர்த்தி மற்றும் அசோகன் தம்புசாமி ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ராதாகிருஷ்ணன், சுஜித் பெரேரா, உதயகுமார் மற்றும் பாடசாலை அதிபர் திலகலோஜினி, கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், கனடா தமிழர் பேரவையின் பங்களிப்பினால் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை விஞ்ஞான ஆய்வுக் கூடம் தொடர்பில் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்…
” இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி வாழ்கின்ற தமிழருக்கு, முன்மாதிரியாக நின்று வழி காட்டி உள்ளது. இலங்கை அரசாங்கத்திடம் நிதி இல்லை. அதைப் பற்றி ஒப்பாரி வைப்பதிலும் பயன் இல்லை. நாளை அரசு மாறினாலும் சடுதியாக மாற்றம் வர போவதும் இல்லை. நாம் இப்போது ‘தமிழர் கல்வி மேம்பாட்டுக் கழகத்தினை’ அமைத்துள்ளோம். அதன் தலைவராக, அதிபர் பரமேஸ்வரனை நியமித்துள்ளோம். மேலும், கல்விக்கு முதலிடம் என்ற கருப்பொருளில் இணையதளம் வெகு விரைவில் அறிமுகமாகும். அதில், இலங்கை முழுக்க அனைத்து மாவட்ட தமிழர் கல்வி தேவைகள் தொடர்பாக நம்பக தன்மை கொண்ட தகவல் பதிவேற்றம் செய்யப்படும். ஆகவே உலக தமிழர் அவற்றை தெரிந்து அறிந்து நேரடியாக உதவிடலாம்.”
