கொழும்பிற்கு இவ்வளவு அபிவிருத்தி திட்டங்களா? 

கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சீன உதவியின் கீழ் 2000 வீடுகளை அமைப்பதற்கான திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக   நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் உள்ள மாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கு உரிமத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலை தனியார் துறை முதலீட்டிற்காக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கு நான்கு வர்த்தகர்கள் அதற்காக முன் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எமது அமைச்சின் கீழ் உள்ள ஹயாத் ஹோட்டலின் 50% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான முதலீட்டாளர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. 

கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையின் தாமரை கோபுரத்திலிருந்து லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான இரு பக்கங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கொழும்பில் உள்ள பேர வாவிகளை சுத்தப்படுத்தும் ஜப்பானிய அரசாங்கத்துடனான திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும்  அருந்திக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். 

இந்தியா, சீனா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply