‘நாடு மீண்டும் முடக்கப்படும்’ – உபுல் ரோஹண (PHI)

பொதுமக்கள் எதிர்வரும் நீண்ட விடுமுறைகாலத்தில் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய செயற்படாதுவிடின், நாட்டை மீண்டும் முழுமையாக முடக்க நேரிடுமென பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்பொழுது பொதுமக்கள் சுகாதார வழிக்காட்டல்களை மறந்து செயற்பட்டு வரும் நிலையில் புதிய கொரோனா அலையை உருவாக்க முனைகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பலரும் வாரந்த விடுமுறை நாட்களின் போது வெளிப்பயணங்கள் மேற்கொண்டு சந்தோஷ களியாட்டங்களில் ஈடுபடுகின்றமை சில மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் ஊடாக அறியமுடிகின்றது எனக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களின் அலட்சியமான செயற்பாடுகளின் காரணமாக மீண்டுமொரு நாடளாவிய முடக்க நிலையை அமுல்படுத்துவதை தவிர வேறு வழி தமக்கு இல்லை என்றும் கூறினார்.

மேலும், இதேநிலை தொடருமானால் ஆறு மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டுள்ள பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் மூடுவதற்கு நேரிடும் என்றும் பொதுசுகாதார பரிசோதகர் சங்க தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டார்.

இதேவேளை 5 மாவட்டங்களில் கொவிட் கொத்தணி உருவாகியுள்ளமையை அவதானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர,; வைத்திய அதிகாரி அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அநுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு கொவிட் கொத்தணி உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமய விழாக்கள், திருமண வைபவங்கள், சமய நிகழ்வுகள் ஆகியவற்றில் பங்கொள்ளும் பொதுமக்களின் காரணமாகவே இந்த கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் நேர்ந்துள்ளதாகவும், பொதுமக்கள் சுகாதார வழிக்காட்டல்களை மீறிச் செயற்படுவதனை தாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

'நாடு மீண்டும் முடக்கப்படும்' - உபுல் ரோஹண (PHI)

Social Share

Leave a Reply