வட்டுக்கோட்டைல் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான ஐவருக்கு தடுப்புக்காவல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான ஐவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (13.03.2024) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் சென்று , வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவன் மனைவி பொன்னாலை பாலத்திற்கு அருகில் கும்பலொன்றினால் கடத்தப்பட்டுகணவன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் தலைமறைவாகியிருந்த நிலையில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இதன்போது மீட்கப்பட்டன.

அத்துடன், உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கார் இரத்த கறைகளுடன் மீட்கப்பட்டதுடன் குறித்த காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இரும்பு கம்பிகள் சந்தேக நபரொருவரின் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply