இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் பெண் ஒருவர், அரசாங்கம் வழங்கும் பணத்தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக சகோதரனை திருமணம் செய்துக் கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சரின் திருமண திட்டத்தின் ஊடாக, ஒரே சமயத்தில் பல தம்பதிகளுக்கு உதவித் தொகையாக பணம் வழங்கி திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூரில் கடந்த 5ம் திகதி நடைபெற்ற இது போன்ற திருமண நிகழ்வின் போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ப்ரீத்தி யாதவ் என்ற பெண்ணுக்கும் ரமேஷ் யாதவ் என்பவருக்குமே திருமணம் நடைபெறவிருந்தது. இருப்பினும், மணமகன் உரிய நேரத்தில் திருமணத்திற்கு வருகைத்தரமையால், இடைத்தரகர்கள் சிலரின் வற்புறுத்தலின் காரணமாக குறித்த பெண் சகோதரரான கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு 51,000 இந்திய ரூபாய் வழங்கப்படுகிறது. குறித்த தொகையில், மணமகளின் வங்கிக் கணக்கில் 35,000 ரூபா வைப்பிலடப்படுவதுடன், திருமணத்திற்கு பரிசுகள் வாங்க 10,000 ரூபாவும் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவதற்கு 6,000 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
திருமணம் செய்து கொண்ட சகோதரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுடன் தொடர்புடைய அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், நிகழ்ச்சிக்கு முன் ஆவணங்களை சரிபார்த்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற இது போன்ற திருமண நிகழ்வின் போது, தகுதியற்ற 240 பேர் பணத்திற்காக திருமணம் செய்து கொள்ள பதிவு செய்திருந்தனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக சில அரசு அதிகாரிகள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இத்தகைய குற்றங்களை தடுக்கும் வகையில் திருமணத் தம்பதிகளின் விவரங்களை அந்நாட்டு அடையாள அட்டையான, ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கு இந்திய உத்தரப் பிரதேச அரசாங்கம் தீர்மானித்துள்ளது.