இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷின் சிலேட் மைதனாத்தில் இன்று(22) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. பின்னர், அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்த கமிந்து மென்டிஸ், இருவரும் இணைப்பாட்டமாக 200 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலு சேர்த்தனர்.
கமிந்து மென்டிஸ் டெஸ்டில் கன்னிச் சதத்தை பதிவு செய்ததுடன், தனஞ்சய டி சில்வாவும் 102 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
அணியின் ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி முதலாவது இனிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் கலீத் அகமது மற்றும் நஹித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.
இரண்டாவது இனிங்கஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்கள், விஷ்வா பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுகளுக்கு 32 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில் மஹ்மூதுல் ஹசன் ஜாய் மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை(23) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.