குஜராத்திற்கு அதிர்ச்சியளித்த பஞ்சாப் அணி 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 200 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை கடந்து தொடரின் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிராக இன்று(04) நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

குஜராத் அணி சார்பில் அணி தலைவர் சுப்மன் கில் 89 ஓட்டங்களையும், சாய் சுதர்ஷன்  33 ஓட்டங்களையும், இறுதி ஓவர்களின் போது அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ராகுல் திவட்டியா 8 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் ரபாடா 2 விக்கெட்டுகளை அதிகப்பட்சமாக கைப்பற்றிக் கொண்டார். 

200 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி ஒரு பந்து மாத்திரம் மீதமிருக்க 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

பஞ்சாப் அணி சார்பில் ஷஷாங்க் சிங் ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றார். 

மேலும், பிரப்சிம்ரன் சிங் 35 ஓட்டங்களையும், அசுதோஷ் சர்மா 17 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

குஜராத் அணி சார்பில் பந்துவீச்சில் நூர் அஹமட் 2 விக்கெட்டுக்களை அதிகப்பட்சமாக கைப்பற்றிக் கொண்டார். 

போட்டியின் ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக பஞ்சாப் அணி ஐ.பி.எல் தொடரின்  தரவரிசைப் பட்டியலில் 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், குஜராத் அணி 6 இடத்தில் உள்ளது. 

கொல்கத்தா, ராஜஸ்தான், சென்னை மற்றும் லக்னோவ் அணிகள் தரவரிசை பட்டியலில் முறையே 1ம், 2ம், 3ம் மற்றும் 4ம் இடங்களில் உள்ளன. 

இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய(05) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

குறித்த போட்டி  ஐதராபாதில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply