நிலையான வைப்புகளுக்கு 15% வட்டி வழங்கப்பட வேண்டும் – சஜித் 

சிறுவர்களை முதியவர்களை பாதுகாப்பது, முதியோர்களின் உயிரைப் பாதுகாப்பது, அவர்களுக்கு உரிய பராமரிப்பு மற்றும் வசதிகளை வழங்குவது ஒரு நாகரீக சமுதாயத்தில் இருக்க வேண்டிய உன்னத குணமாகும். சிரேஷ்ட பிரஜைகளினால் வங்கிகளில் வைப்புச் செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு 15% வழங்கப்பட்டு வந்த விசேட வட்டி வீத முறைமை தற்போது 6% மற்றும் 8% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களது வியர்வை மற்றும் கடின உழைப்பின் மூலம் சேமித்த பணத்தில் கிடைத்த வட்டியில் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வட்டி விகிதங்களை குறைக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். சிரேஷ்ட பிரஜைகளின் கதியை கவனத்தில் கொள்ளுங்கள். பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, இவர்களுக்கான வட்டியை 15% வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தேன். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை அதற்காக தொடர்ந்தும் குரல் எழுப்புவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 142 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு, வெலிஓயா எஹடுகஸ்வெவ வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 04 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக எதிர்கட்சி தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம்,வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மேலும் உரையாற்றிய சஜித் பிரேமதாச தெரிவித்ததாவது, 

” நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதால் ஜனசவிய போன்ற வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும். ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்திற்கும் தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கும் ஊக்கமளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த ஓர் வேலைத்திட்டம் இது முன்னெடுக்கப்படும். வறுமையோடு வாழ்ந்து வரும் மக்களை அந்தப் பொறிகளில் இருந்து மீட்டெடுப்போம்.

எதிர்க்கட்சியின் ஏனைய அரசியல் தலைவர்களில் இருந்து நான் முற்றிலும் மாறுபட்டவன். பேரூந்துகளில் ஆட்களை அழைத்து வந்து கூட்டங்களை நடத்த சிலரிடம் பணம் இருக்கிறது. ஆனால் பாடசாலையின் குறைபாடுகளை சரி செய்வதற்கு பணமோ, தேவையோ இல்லாது போன்று செயற்பட்டு வருகின்றனர். இதனால்தான் ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளிலிருந்து வேறுபட்டது.

தலைநகரில் குளிரூட்டி அறைகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் தலைவர்களும், கஷ்டப் பிரதேசங்களுக்குச் சென்று இப்பிரதேச மாணவர்களும் ஆசிரியர்களும் படும் துயரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு தரப்பினரினரினதும் கட்சியினரினதும் பொய்களுக்கு  இனிமேலும் அடிமையாகாமல் இருக்க வேண்டும். நாட்டுக்காக சரியான தீர்மானத்தை எடுப்பது மக்களின் கைகளிலேயே உள்ளது

பாடசாலைகளில் தரங்களை பிரித்து,ஒரு தரப்பிற்கு மாத்திரம் மதிய போசனங்களை வழங்க முடியாது. சகல பிள்ளைகளையும் வேறுபாடின்றி சமமாக நடத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply