பாடசாலையிலிருந்தே தொழில் முனைவு அவசியம் – சஜித் 

ஒரு நாடாக நாம் பாடசாலை கல்விக்குப் பிறகே தொழில் முயற்சியாண்மை குறித்து சிந்திக்கிறோம், ஆனால் பாடசாலை பாடத்திட்டத்தில் இருந்தே தொழில்முனைவு குறித்து சிந்திக்க வேண்டும். 10 இலட்சம் புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். இதற்கான சூழலையும் பண்பாட்டையும் பிள்ளைகளுக்கு பாடசாலை வாழ்விலிருந்தே வழங்க வேண்டும். இதன் அர்த்தம் கல்வியை ஒதுக்கி வைத்துவிட்டு வியாபாரம் செய்வதல்ல, வியாபாரம் செய்வதற்கு தேவையான கல்வியை வழங்குவதே இதன் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன் மூலம் யாரினதும் அடிமையாகவோ, அல்லது அத்தகைய மனப்பான்மையோ இல்லாமல் தனித்து சொந்த காலில் நிற்கும் தலைமுறையை உருவாக்கக்கூடிய கல்வி முறையை வகுக்க வேண்டும். இதற்கு தொழில்நுட்பம் சார்ந்த திறன் கல்வி வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 144 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், வவுனியா தெற்கு,சிங்கள பரக்கும் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 04 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம்,வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்ததாவது,  

” நாடே முறைமையில் மாற்றத்தை நாடி நிற்கும் போது, கல்வியிலும் அதே போல் எதிர்க்கட்சியாக செயல்படும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது ஐக்கிய மக்கள் சக்தியே. சுதந்திரத்தின் பின்னர் எந்தவொரு கட்சியும் இவ்வாறான அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. 

கல்வியை மேம்படுத்த புதிய கருத்துக்களை முன்வைக்கும்போது எம்மைப் பார்த்து கேலி செய்கின்றனர். சிறுமிகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத் துவாய் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசிய போது,புதிய கருத்துக்களை முன்வைத்த போது இந்த யோசனை கேலிக்குள்ளானது. இன்று, பாடசாலை மாணவிகளை முதன்மையாகக் கொண்டு அந்த திட்டத்தை அரசாங்கமே செயல்படுத்தி வருகிறது. தாம் ஆட்சிக்கு வந்ததும், பாடசாலை மாணவிகளுக்கு மட்டுமன்றி, தேவைப்படும் அனைத்து பெண்களுக்கும் இந்த வசதிகளை இலவசமாக வழங்குவோம்” என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply