இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை அணியின் சொந்த மைதானமான எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் இன்று(08) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
கொல்கத்தா அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ஓட்டங்களையும், சுனில் நரைன் 27 ஓட்டங்களையும் மற்றும் ரகுவன்ஷி 24 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டார்.
சென்னை அணி சார்பில் பந்துவீச்சில் ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசூர் 2 விக்கெட்களையும் மற்றும் தீக்ஷன ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டனர்.
138 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
இதன்படி, சென்னை அணி இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியது.
சென்னை சார்பில் அணி தலைவர் ருத்துராஜ் கெய்க்வாட் 67 ஓட்டங்களையும், டரில் மிட்செல் 25 ஓட்டங்களையும் மற்றும் சிவம் துபே 18 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணி சார்பில் பந்துவீச்சில் வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும் சுனில் நரைன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக சென்னை அணியின் ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய சென்னை அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 4 இடத்திலும், கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளது.
ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றது.
இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய(09) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சண்டிகர் நகரின் முல்லன்பூர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.