சிவனொளிபாத மலையில் பரவும் ஆக்கிரமிப்பு தாவர இனம் 

சிவனொளிபாத மலையை சுற்றியுள்ள காடுகளில் பரவி வரும் ஆக்கிரமிப்பு தாவர இனங்களை உடனடியாக அகற்றுமாறு வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி பணிப்புரை வழங்கியுள்ளார். 

ஆக்கிரமிப்பு தாவர இனமான ‘கோனிகியா மோலிஸ்’ எனும் தாவரம், சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையிலும் குறித்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் கழிப்பறைகளுக்கு அருகிலும் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஆக்கிரமிப்பு தாவர இனத்தை அகற்றுவதற்கு உரிய விஞ்ஞான  முறைகளை பயன்படுத்துமாறு பவித்ரா தேவி வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். 

குறித்த ஆக்கிரமிப்பு தாவர இனம் பரியுள்ள இடங்களில் காணப்பட்ட ஏனைய தாவரங்கள் முற்றாக அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும்,  குறித்த ஆக்கிரமிப்பு தாவர இனம் 6 முதல் 8 அடி உயரம் வரை வளரக் கூடியது என்றும், தாவரத்தின் அதன் வேர் அமைப்பின் உறுதித்தன்மையை படிப்படியாக  குறைவடையும் என சப்ரகமுவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இதன் காரணமாக மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த ஆக்கிரமிப்புத் தாவரமானது உயிர்களின் பன்முகத்தன்மையில் (Biodiversity) பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

‘கோனிகியா மோலிஸ்’ எனும் ஆக்கிரமிப்பு தாவர இனம் முதலில் மியன்மார் மற்றும் கிழக்கு இமயமலை பகுதிகளில் கண்டறியப்பட்டதுடன், தற்போது நேபாளம் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. 

Social Share

Leave a Reply