நாட்டின் நலிவுற்றிருக்கும் பொருளாதாரநிலை காரணமாகப் பட்டினியை எதிர்நோக்கியிருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டும் மக்களின் நிலையைக் கருத்திற் கொண்டு அரிசியின் விலையை உடனடியாகக் குறைக்குமாறு கோரி “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு” எனும் அமைப்பினால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று(09) முன்னெடுக்கப்பட்டது.
கடந்த கால யுத்தம் மற்றும் கொரோனா தொற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த மக்கள்,தற்போதைய பொருட்களின் விலையேற்றம் காரணமாக,பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
அரசாங்கம் இந்நிலையைக் கருத்தில் கொண்டு,அரிசியின் விலையை நூறு ரூபாவிற்கும் கீழ் குறைக்கக் கோரி்யே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் சுற்றுவட்டத்திற்கு முன்பாக காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.
மேற்படி போராட்டமானது இன்றைய(09) தினம் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.