15 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்த கொல்கத்தா – LSG vs KKR 

15 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்த கொல்கத்தா – LSG vs KKR இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

கொல்கத்தாவில் இன்று(14) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப், லக்னோவ் அணி சார்பில் தன்னுடைய முதல் ஐ.பி.எல் போட்டியில் இன்று(14) களமிறங்கியிருந்தார். 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோவ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

லக்னோவ் அணி சார்பில் பூரன் 45 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 39 ஓட்டங்களையும் மற்றும் ஆயுஷ் பதோனி 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.  

கொல்கத்தா அணி சார்பில் பந்துவீச்சில் மிட்சல் ஸ்ட்ராக் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக கைப்பற்றினார். 

162 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

கொல்கத்தா அணி சார்பில் பில் சால்ட் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களையும், ஷ்ரேயஸ் ஐயர் 38 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

லக்னோவ் அணி சார்பில் பந்துவீச்சில் மோசின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

மேலும், தன்னுடைய முதல் ஐ.பி.எல் போட்டியில் களமிறங்கிய ஷமர் ஜோசப் பந்துவீசிய 4 ஓவர்களில் 47 ஓட்டங்களை வழங்கியிருந்தார். 

இதன்படி, இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால்  வெற்றியீட்டியது. 

இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக கொல்கத்தா அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், லக்னோவ் அணி 6 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளது.  

Social Share

Leave a Reply