உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஊடாக இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவித்து இனவாதக் கலவரங்களை ஏற்படுத்தி, உயிர் மற்றும் உடைமைச் சேதங்களை ஏற்படுத்தி, குறுகிய அரசியல் இலக்கை அடைவதற்காக குழுவொன்று மேற்கொண்ட சதி என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி மற்றும் தாக்குதலை திட்டமிட்டவர்களை சட்டத்திற்கு முன்னால் நிறுத்துவதே தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் முதன்மையான நடவடிக்கை என அக்கட்சி உறுதியளித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி நேற்று(17) இந்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான உறுதிமொழி தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தி கட்சியினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதம செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்கவின் கையொப்பத்துடன் குறித்த அறிக்கை நேற்று(17) வெளியிடப்பட்டுள்ளது.
முழுமையான நீதிமன்ற அதிகாரத்துடன் கூடிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினுடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், உரிய நபர்களுக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்கவும் பின்வாங்கப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது.