சுற்றுலாத்துறை படிப்படியாக முன்னேறி, அதிக அளவில் வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ள வேளையில், இந்த அரசாங்கம் திடீரென வெளிநாட்டினருக்கான விசா கட்டணத்தை அதிகரித்துள்ளது. சார்க் நாடுகளில் உள்ள வெளிநாட்டினருக்கு 20 முதல் 35 டொலர் வரையிலும், சார்க் அல்லாத நாடுகளில் உள்ள வெளிநாட்டினருக்கு 50 முதல் 75 டொலர் வரையிலான சேவைக் கட்டணமும், மேலதிக கட்டணமும் அறவிட்டு வருகிறது. சார்க் அல்லாத நாடுகளின் விசா கட்டணம் 100 டொலர்களைத் தாண்டியுள்ளது. சார்க் நாடுகளுக்கான வீசா கட்டணம் 58 டொலர்களை தாண்டியுள்ளது, இதன் காரணமாக முன்னேற்றம் கண்டு வந்த சுற்றுலாத்துறை கூட ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, ரஷ்யாவில் இருந்து ரெட் விங்ஸ் என்ற விமானம் மூலம் சுமார் 800 சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டிற்கு வருகை தரவிருந்தனர்,என்றாலும் அதுவும் தற்போது கைவிடப்பட்டுள்ளது . இது போன்ற முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், உகந்த ஆய்வு நடத்தப்பட்டதா என்பதில் சிக்கல் நிலவுகிறது. தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மாலைதீவு மற்றும் மாலி போன்ற நாடுகளுக்கு விசா சலுகையும், விசா கட்டணமும் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நேரத்தில், நமது நாட்டில் 100 டொலரைத் தாண்டிய தொகை அறவிடப்படுகிறது, இது ஒரு முட்டாள்தனமான முடிவு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 159 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கொழும்பு, மஹரகம, ஸ்ரீ சந்திரரத்ன மானவசிங்க மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 18 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பாடசாலையின் மேலதிக செலவினங்களுக்காக ஒரு இலட்சம் ரூபா நிதியை பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கு வழங்கி வைத்தார்.
எலக்ட்ரானிக் டிராவல் ஆட்டோமேஷன் சிஸ்டத்தில் இருந்து விலகி, VFS உலகளாவிய இணையதளம் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதால், விசா கொள்முதல் செயல்முறையை வினைதிறனற்றதாக ஆக்கியுள்ளது. புதிய முறையில் விசா பெறும் வாய்ப்பை இல்லாமலாக்கி, தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி விட்டுள்ளது. இந்நிலையில் 30 நாள் விசாவுக்கான வாய்ப்பை கூட இழந்துள்ளது. இதன் காரணமாக சில வெளிநாட்டவர்கள் நீண்ட காலம் தங்குவதற்கு வழங்கப்படும் விசாக்களை பயன்படுத்தி இந்நாட்டில் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். வட்டியில்லா இணையக் கடன் மாபியா நாட்டில் உருவெடுத்துள்ளதையும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
தன்னிச்சையான மற்றும் முட்டாள்தனமான முடிவுகளால் சுற்றுலாத் துறையின் பங்குதாரர்கள் விரக்தியடைந்துள்ளனர். இது குறித்து கலந்துரையாடி,ஆலோசிக்காமல் இவ்வாறு அதிகரிப்பதால் நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.