இறுதி ஓவரில் தப்பிப் பிழைத்த மும்பை இந்தியன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 193 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை, போட்டியின் இறுதி ஓவர் அடைவதற்கு முயற்சி செய்த போதிலும், குறித்த முயற்சி தோல்வியில் நிறைவடைந்தது.
சண்டிகரில் இன்று(18) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
மும்பை அணி சார்பில் சூரியகுமார் யாதவ் 78 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 36 ஓட்டங்களையும் மற்றும் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் மற்றும் ரபாடா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.
193 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இளம் வீரரான அசுதோஷ் சர்மா 28 பந்துகளில் 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
மேலும், பஞ்சாப் அணி சார்பில் சஷாங் சிங் 41 ஓட்டங்களையும் மற்றும் ஹர்ப்ரீத் பாரர் 21 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் ஜெரால்ட் கோட்சே மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் மத்வால், ஹர்திக் பாண்டியா மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஓட்டங்களினால வெற்றியீட்டியது.
போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் 9ம் இடத்திலும் உள்ளது.
இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய(19) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
லக்னோவில் நாளை(19) இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.