சென்னைக்கு அதிர்ச்சியளித்த லக்னோ அணி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

லக்னோ மைதானத்தில் இன்று(19.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

சென்னை அணி சார்பில் ஜடேஜா 57 ஓட்டங்களையும், ரஹானே 36 ஓட்டங்களையும், மொயின் அலி 30 ஓட்டங்களையும் மற்றும் தோனி 9 பந்துகளில் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

லக்னோ அணி சார்பில் பந்துவீச்சில் குர்னல் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், மோஹின் கான், யாஷ் தகூர், பிஷ்னோய் மற்றும் மர்கஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.   

177 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

லக்னோ அணி சார்பில் அணி தலைவர் கே.எல்.ராகுல் 82 ஓட்டங்களையும், டி கொக் 54 ஓட்டங்களையும் மற்றும் பூரன் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

சென்னை அணி சார்பில் பந்துவீச்சில், முஸ்தாபிசுர் மற்றும் பத்திரன தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக லக்னோ அணி தலைவர் கே.எல்.ராகுல் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய லக்னோ அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், சென்னை அணி 8 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளது. 

இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

டெல்லியில் நாளை(20.04) இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply