யாழ்ப்பாணத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாகவும் கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அனலைதீவு உள்ளிட்ட சில தீவுகளில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மின் உற்பத்தி நிலையங்கள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாது என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் அதானி தரப்பினரை சந்திக்கவுள்ளதாகவும், சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.