ஒலிம்பியன் எதிர்வீரசிங்கமின் இறுதிக்கிரியைகள்

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் காலமானார்.

நுரையீல் அழற்சி காரணமாக கடந்த 18 ஆம் திகதி அமெரிக்காவில் காலமானார்.

1933 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் பெரியவிளானில் பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளார்.

1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார்.

1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு
பாய்ந்து தங்கப்பதக்கத்தையும் சுவீகரித்தார்.

இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பையும் பெற்றிருந்தார்.

1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இலங்கை தமிழனாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குப்பற்றிய முதலாவது வீரர் இவரே.

இவரின் பின்னர் எந்தவொரு தமிழ் வீரரும் இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றவில்லை.

இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply