இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 262 எனும் வெற்றியிலக்கை கடந்து பஞ்சாப் கிங்ஸ் அபார அணி வெற்றி பெற்றுள்ளது.
இருபதுக்கு இருபது போட்டி வரலாற்றில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அணியொன்று அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை கடந்த சந்தர்ப்பமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் இன்றைய அதிரடியாட்டம் பதிவாகியது.
கொல்கத்தாவில் இன்று(26.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி,முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
கொல்கத்தா அணி சார்பில் பில் சால்ட் 75 ஓட்டங்களையும், சுனில் நரைன் 71 ஓட்டங்களையும், வெங்கடேஷ் ஐயர் 39 ஓட்டங்களையும் மற்றும் சிரேயாஸ் ஐயர் 10 பந்துகளில் 28 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் அணி சார்பில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் சாம் கரன், ஹர்ஷல் படேல் மற்றும் ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
262 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
பஞ்சாப் அணி சார்பில் ஜோனி பேர்ஸ்டோ 108 ஓட்டங்களையும், சஷாங்க் சிங் 68 ஓட்டங்களையும் மற்றும் பிரப்சிம்ரன் சிங் 54 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா அணி சார்பில் பந்துவீச்சில் சுனில் நரைன் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி சார்பில் களமிறங்கியிருந்த, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா பந்துவீசிய 3 ஓவர்களில் 48 ஓட்டங்களை வழங்கியிருந்தார்.
இதன்படி, இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் ஜோனி பேர்ஸ்டோ தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டிய பஞ்சாப் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும், கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளது. .
இதேவேளை, ஐ.பி.எல் தொடரில் நாளைய இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
நாளை(27.04) பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.