இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று(08.05) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதியரசர்களான காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிரான மனு, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 13ம் திகதி நிறைவடைந்த நிலையில், குறித்த மனு மீதான தீர்ப்பு காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரஜாவுரிமைக்கு எதிராக தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு, இரண்டு வாரங்களின் பின்னர் சமூக செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் இந்த மேன்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.