க.பொ.த சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞானம் மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன பாராளுமன்றத்தின் இன்று(13.05) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
விஞ்ஞான பரீட்சையின் போது, பல்தேர்வு வினாக்கள்(M.C.Q) உட்பட ஏனைய சில வினாக்கள் தொடர்பில் பதிவாகிய பிரச்சினைகளுக்கு, பரீட்சை வினாத்தளை ஒழுங்கமைத்தவர்கள் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில மொழி வினாத்தாள் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன, பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் இதனுடாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாத வகையில், மதிப்பெண் திட்டத்தை தயாரிக்கும் போது இந்த விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.