பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் கொழும்பு, பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இன்று(13.05) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
08 வருடங்களாக நிலவி வரும் சம்பள முரண்பாடு, மாதாந்த கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு கோரி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சுமார் ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இணைந்து இன்று(13.05) ஏற்பாடு செய்திருந்த போராட்ட பேரணிக்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வீதி நாடகங்களை நடத்தவுள்ளதாக, மிரிஹான தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நுகேகொட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியிருந்தது.
அனுலா வித்தியாலயம், புனித ஜோசப் பெண்கள் கல்லூரி, சமுத்திரா தேவி பெண்கள் கல்லூரி, புனித ஜோன்ஸ் ஆண்கள் கல்லூரி, சுஜாதா பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதுடன், பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள அனுலா வித்தியாலயம் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமாகவும் இயங்கி வருவதினையும் கருத்திற்கொண்டு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.